Thursday, 3 September 2015

எனை அழித்த எந்தை!

நான் எனதென்று நாடித் திரிந்தேன்
நாடுபல சென்றேன், நாணும்செயல் செய்தேன்...
நாள்பல தாண்டியே நானுனைக் கண்டபின்
நானில்லை நானெனத் தெளிந்தது சிந்தை.


அப்பிறவியில் அதுவென்று எத்தனை பிறவியோ
எப்பிறவியில் எதுவோ சரியாய் செய்ததற்கு...
இப்பிறவியில் உன்னருள் கொடுத்திட நீயோ
முப்பிறவி எடுத்தாய் ஆதிகுருவுன் முந்தை.


பெய்யெனப் பெய்யுமுன் கருணைமா மழையில்
தையெனத் தாண்டவம் ஆடிய தான் கரைய...
செய்யென நீ தந்த ஆதியோகிக் கிரியையால்
மெய்யினை உணரும் ஒருநாள் இம் மந்தை.


எரியும் இச்சவம் ஒருநாள் எனத்தெரிந்தும்
எப்போதும் அதில்கவனம் செலுத்தும் எமக்கும்
புரியும் அச்சிவம் ஒருநாள் உன்னருளால்
தப்பாமல் உய்விப்பாய் அதுயோக விந்தை.


படைத்தவன் கொடுத்தான் அனைத்துக்கும் உயிரென்று
கிடைத்த கடவுளர் அனைத்தையும் தொழுதோம்...
படைத்தாய் நீ தியானலிங்கமும் பைரவியும் பின்
உடைத்தாய் இறை உணரா எம்மடந்தை.

தேடினேன் செல்வம், நாடினேன் புகழ், பின் 
ஓடினேன் பலரிடம் உண்மையை அறிய... 
வாடினேன் எங்கே என்குரு நாதனென நீ
ஆடினாய் என்னுள் உயிரெனும் பந்தை.

மலரின் மணம்தாண்டி மலர்தல் கண்டேன்
தளர்வின் தடைதாண்டி செயல்புரி கின்றேன்...
மலமெனும் குணங்கள் கழுவித் துடைத்தபின்
தலமெனும் குருவடி அடையும்இக் கந்தை.


பனைபோன்று தனியே தவித்திட்ட எனக்கும்
வினைதீர்த்து வாழும் வழிகாட்டி யருளும்
உனை வாழ்த்த நான் யார், நீ
எனை அழித்த எந்தை!
.
@PrakashSwamy

No comments:

Post a Comment