Wednesday 10 February 2016

கண்டு கொண்டேன்!

கரிய நல் இரவில்
கண்ணீரின் பொழிவில்
கண்டு கொண்டேன் நான் 
கருணை மாமழையை!

நாதம் ஒலிக்கையில்
நானெனை மறந்தபின் 
கண்டு கொண்டேன் நான் 
நாதனின் பாதத்தை!

ஆடலுடன் பாடலென 
ஆர்ப்பரித்த ஆர்வலரில் 

கண்டு கொண்டேன் நான்
அந்தமிலா ஆதியை!


கந்தனை எண்ணியே 
வந்தனை செய்கையில் 

கண்டு கொண்டேன் நான் 
எந்தையின் அருளை!


தானமாய் அன்னமுடன் 
தேனெனும் அருளுரையில் 

கண்டு கொண்டேன் நான் 
மோனமெனும் அருமருந்தை!


தத்தகிட தாண்டவம் 
முத்திதரும் யோகம் 

கண்டு கொண்டேன் நான் 
பித்தனவன் பாதையை!


பிழையான வாழ்வால் 
விழையாத உயிர்க்கும் 

கண்டு கொண்டேன் நான்
அழையாது வரும் அருள்!


ஆண்டவனைத் தேடுவோர் 
வேண்டாவென ஓடுவோர் 

கண்டு கொண்டேன் நான் 
தாண்டவனை நாடுவார்!


அவயத்தின் அழகுதாண்டி 
சுவையுணவு ஆவல்தாண்டி 

கண்டு கொண்டேன் நான் 
சிவமயமென் சித்தமெலாம்!


ஆதியிலா சோதியவன்
சாதியிலா வேதமவன் 

கண்டு கொண்டேன் நான் 
பாதிதந்த யோகியவன்!


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
கண்டு கொண்டேன் நான்
அண்டம் படைத்தோனை!

காலம் வென்ற பைரவன்  
கோலம் ருத்ர தாண்டவன்
கண்டு கொண்டேன் நான் 
ஞாலம் ஆளும் ஞானியை! 

இல்லாத இருப்பில்
சொல்லாத மொழியில்

கண்டு கொண்டேன் நான் 
எல்லாமும் சிவமென!



@PrakashSwamy
.