Monday 7 July 2014

சிதம்பர ரகசியம்!

சிதம்பர ரகசியம்! 24-Nov-1992ல் எழுதப்பட்ட ஸ்வாமியின் இந்தக் கவிதையின் ஆழமும், அர்த்தமும் இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகும் ஸ்வாமிக்கே வியப்பாக உள்ளது. ஆன்மீகத் தேடல் தொடங்க ஆண்டு பல இருப்பினும் (சத்குருவின் அருள் பார்வை ஸ்வாமி மீது பட்டது 2009ம் ஆண்டு), அதற்கான விதை உள்ளே பொதிந்திருந்ததை இந்தக் கவிதையைச் சுவைக்கும்போது உணரமுடிகிறது. 12-Dec-1992ல் கணையாழிக்கு அனுப்பப்பட்ட (புனைப் பெயர் சி பி வியாஸ்) இந்தக் கவிதை பதிப்பிக்கபடாமல் போனது பற்றி அன்றும், இன்றும் கவலை ஒன்றுமில்லை! 

ஓரிரு சொற்களைத் தவிர மாற்றம் ஏதுமின்றி, 'சிதம்பர ரகசியம்' ஸ்வாமியம்...

சிதம்பர ரகசியத்தைச்
சென்று, பார்த்து, பின்
ஒன்றும் புரியாமல்
ஊருக்கு வந்தேன்!

பக்கத்துக்கு ஊருக்கொரு
பக்கிரி* வந்தாரென்று
பக்தர்கள் எல்லோரும்
படைதிரண்டு சென்றனர்.

சித்துக்கள் புரியாத
சித்தரவர் என்றனர்!
வித்தைகள் புரியாத
வித்தகர் என்றனர்!

பேருரைகள் ஆற்றாமல்
பிரசங்கங்கள் புரியாமல்
மக்கள் குறைதீர்க்கும்
மௌனகுரு என்றனர்!

நானும் போனேன்.
நகைமுகம் கண்டேன்.
ஒன்றுமே வேண்டாமல்
ஓரமாய் நின்றேன்.

‘என்குறை தீரும், என்குறை தீரும்'
என்றவர் விடுத்து
என்னையே நோக்கினார்.
‘இங்கு வா’ என்றார்.
எதிரில் போய் நின்றேன்.

‘நீ யார்?’ என்றார்.
‘நான் மனிதன்!’ என்றேன்.

‘இது என்ன?’ என்றார்.
‘என் உடல்!’ என்றேன்.

‘இறப்புக்குப் பின்னால்?’
‘வெறும் பிணம்!’ என்றேன்.

‘அதற்கும் பின்னால்?’
‘அவ்வளவுதான்!’ என்றேன்.

‘அவ்வளவே என்றால்?’
‘ஒன்றுமில்லை!’ என்றேன்.

‘அதுதான்!’ என்றார்.
அடுத்தவரைப் பார்த்தார்.

ஏதும் கேட்காமல்
எல்லாம் புரிந்தது.
எல்லாமே எதுவும்

இல்லையென்றும் தெரி(ளி)ந்தது!  

*பக்கிரி - சாமியார்.

~ @PrakashSwamy