Wednesday 16 September 2015

க-விதை 10 ~ இங்கே... இவர்கள்...

இங்கே...
பெண் குழந்தை பிறக்கும்போது,
தாலாட்டுப் பாடவேண்டிய
தாய்மார்கள்...
ஒப்பாரி வைக்கிறார்கள்!

இங்கே...
அரசியலில் பல திருடர்கள்
அரசின் காவலர்களாயிருக்க,
நீதி வழங்கும் சில
நீதியரசர்கள்...
தங்கள் தீர்ப்புகளால்
நீதியைத் தண்டிக்கிறார்கள்!

இங்கே...
வரதட்சணை கொடுத்தும்
வாழாவெட்டியாக
விரும்பாத பெண்கள்...
தளையென்று திருமணத்தை
வெட்டி விட்டுத்
தனியே வாழ
முடிவெடுத்து விட்டார்கள்!

இங்கே...
அரசை எதிர்த்துப் போராடத்
துடிக்கும் ஆசிரியர்களுக்கு,
மாணவர்கள்...
பாடம் நடத்துகிறார்கள்!

இங்கே...
தனி மாநிலத் தாய்க்குப்
பொட்டு வைக்க விரும்பும்
தீவிரவாதிகள்...
தம் மாநிலச்
சகோதரிகளின் பொட்டுகளைத்
தீவிரமாய் அழிக்கிறார்கள்!

இங்கே...
மழை வேண்டிச் செய்யும்
யாகத்தில் எரிக்க
மூட மனிதர்கள்...
மரங்களை வெட்டுகிறார்கள்!

இங்கே...
இட ஒதுக்கீடு சட்டம்போட்டு
இந்திய சகோதர/ரிகளிடையே
ஒற்றுமைக்கு இடமின்றி
ஒதுக்கி வைக்கிறார்கள்!

இங்கே...
வேலைவெட்டி ஏதுமில்லா
இளைஞர்கள்...
சினிமா, அரசியல்
சித்துவிளையாட்டில் மூழ்கி
வெட்டிவேலை செய்கிறார்கள்!

இங்கே...
கல்வி கற்றபின்
கனவுடன் இளைஞர்கள்
தொழில்தேடி அலைய,
கல்லூரி அதிபர்கள்...
கல்வியைத் தொழிலாக்கிவிட்டார்கள்!

இங்கே...
வெள்ளை அடிமைச் சிறையின்
விலங்குடைத்துப் பெற்ற
சுதந்திரத்துக்கு தினம்
கொண்டாடுபவர்கள்...
தனிமனித
சுதந்திரத்தை தினம்
விலங்கு பூட்டிச்
சிறையில் அடைக்கிறார்கள்!

இங்கே...
இறந்த காலத்தில்
இழந்த வாய்ப்புகளை மறந்து
எதிர்கால வெற்றிச் சிகரங்களுக்காக
நிகழ்கால அஸ்திவாரங்களை
அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!
.

க-விதை is the #Swamyem series of #poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting #love, some of which got published in popular magazines!
#தமிழ் #கவிதை #poem #poetry #tamil #Youth #love #think #Thinking

No comments:

Post a Comment