Sunday, 12 January 2014

'உறையும் இறை!'

"உறையும் இறை!"

அண்டப் பெருவெளியின் அசைவிலா வெறுமை
விண்மீனின் விடாப்பிடிக் கண்சிமிட்டல்
ஆகாயத்தின் முடிவிலாப் பரப்பு
மேகத்தின் உருமாறும் மென்மை  
மின்னலின் அடிமுடிகாணா வேகம்
இடியின் அதிரடித் தாக்கம்
மழையின் மிதமான சாரல்
வானவில்லின் வடிவான வண்ணம்
கடலின் இடைவிடா அலை
அருவியின் தொடர் வீழ்ச்சி
ஆற்றின் ஒழுங்கிலா நீரோட்டம்
ஊற்றின் சிறுதுளிப் பெருவெள்ளம்  
கரையோர இதமான மரநிழல்
மரத்தின் பரவிடும் கிளைகள்
கிளையின் முளைவிடும் இலைகள்
இலையின் பன்னிறப் பசுமை
காற்றின் வருடும் தென்றல்
மூங்கிலின் காற்றுக் குழலொலி
தடாகத்தின் மிதக்கும் தாமரை
மலரின் விரியும் இதழ்
கல்லின் அசையாக் காத்திருப்பு 
புல்லின் வளையும் மென்மை
மலையின் உயரும் சிகரம்
பூமியின் எல்லையில்லாப் பொறுமை
இரவின் அடர் கருமை
புலர்காலை பரவும் இளம்வெயில்
காகத்தின் தொடர் கரையொலி
சேவலின் அதிகாலைக் கூவல்
கிளியின் அர்த்தமறியாப் பேச்சு
குயிலின் கவியிலாப் பாடல்
மயிலின் தீட்டிய தோகை  
மானின் மருளும் கண்கள்
நாயின் நட்பின் வாலாட்டல்
நரியின் நடுக்கும் ஊளை
குதிரையின் சீரான ஓட்டம்
குரங்கின் ஈர்ப்பெதிர்க்கும் தாவல்
புலியின் மிரட்டும் உறுமல்  
சிறுத்தையின் அதிவேகப் பாய்ச்சல்
சிங்கத்தின் கம்பீரப் பிடரி
யானையின் வளையும் துதிக்கை
தவளையின் தடையிலாக் கச்சேரி
வண்டின் தொடர் ரீங்காரம்
பாம்பின் பயத்தின் சீறல்
பறவையின் இறகசையா மிதப்பு
முதலையின் முரட்டுச் செதிள்கள்
மீனின் வழுக்கும் நீச்சல்
சிலந்தியின் சமச்சீர் வலை
எறும்பின் சுறுசுறு ஓட்டம்
காளையின் நிமிர்ந்த திமில்
பசுவின் பால்தரும் மடி
தாயின் இதமான அரவணைப்பு
தந்தையின் இடைவிடா முயற்சி
குடும்பத்தின் சலசலக்கும் கலகலப்பு
விழாவின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்
குழந்தையின் கள்ளமிலாச் சிரிப்பு
பிள்ளையின் ஆற்றல்மிக்க விளையாட்டு
இளமையின் இடர்தாண்டும் துள்ளல்
காதலின் கசியும் இனிமை
பெண்மையின் உருக்கும் வெம்மை  
ஆண்மையின் இறுக்கும் வலிமை
உறவின் இணைந்த பிணைப்பு
பிரிவின் தொலையாத் தொடர்பு 
செழிப்பின் கிறக்கத் தாண்டவம் 
இழப்பின் அறுக்கும் வலி
இசையின் இனிய ஓசை 
நடனத்தின் அழகிய அசைவு
கோயிலின் வண்ணமிகு கோபுரம்
சிற்பத்தின் வடிவான கலைநயம்
தீபத்தின் ஒளிரும் சுடர்
கர்ப்பகிரகத்தின் இருண்ட ஒளிர்வு
கற்பூரத்தின் களங்கமற்ற ஒளி
பிரார்த்தனையின் இயல்பான பணிவு
பிறப்பின் முதல் தொடக்கம்
இறப்பின் இறுதி முடிவின்மை
தன்செயலின் பன்முகத் திறமை 
தனிமையின் தவிப்பிலா ஒருமை
கேள்வியின் தொடர் தேடல்
பதிலின் அடர் குழப்பம்
அறியாமையின் அடங்கா வலி
அகந்தையின் ஒடுங்கிய அடக்கம்  
குருவின் எல்லையிலாக் கருணை  
தியானத்தின் ஆழ்ந்த அமைதி
சேவையின் சுயநலமற்ற தன்னார்வம்  
பக்தியின் கரையும் தன்னிலை
இதுவரை இருந்ததன் ஏன் 
இனி இராது அழியும் நான்  
ஞானத்தில் திறக்கும் அகக்கண் 
ஆனந்தத்தின் சிலிர்த்த கண்ணீர்த்துளி...

எதிலும் முதலில்,
எங்கும் முடிவில்,
எதற்கும் இடையில்,
எண்ணிலடங்கா வடிவும், 
எண்ணற்ற வண்ணமும், 
எண்ணம் தாண்டிய உருவும் கொண்டு
எல்லையற்று விரியும் இயற்கையில்,
எப்போதும் உறையும் இறை!

@PrakashSwamy

1 comment:

  1. jus too good... I am amazed at your tamil poetry skills... enna oru azhagu indha kavidhaila?! :)

    ReplyDelete