Sunday, 14 June 2015

இலன் எனினும் உளன்!

உளன் எனில் உளன்.
இலன் எனில் இலன்.

உளன் கதிரவன் காலை ஒளியில்.
இலன் அவன் மாலை இருளில்!

உளன் தென்றல் மர அசைவில்.
இலன் காற் றசையா மரத்தில்!

உளன் நீர் பொழி மழையில்.
இலன் சுனை நிலத் தடியில்!

உளன் வான் வெளிர்நீல வெளியில்.
இலன் கரு மேகக் கவர்வில்!

உளன் பறவை கரை ஒலியில்.
இலன் இறகு மடித்தொரு கிளையில்!

உளன் நாக மெடு படத்தில்.
இலன் உதிர் இலை மறைவில்!

உளன் விரி மலர் மணத்தில்.
இலன் வாடி வீசிய கூளத்தில்!

உளன் உண்ணும் முன் இலையில்.
இலன் உண்ட பின் உள்வயிற்றில்!

உளன் வளர்ந்து சுருங்கும் உடலில்.
இலன் எரிந்து கரையும் தழலில்!

இலன் அடையாப் பொருளில்.
இலன் அடங்கா ஆசையில்.
இலன் அழியாப் பகையில்.
இலன் இரங்கா மனத்தில்.
இலன் ஈயாச் செல்வத்தில்.
இலன் உடல் சார் உறவில்.
இலன் உயிர் நோக்கா உணர்வில்.

உளன் தீ உள் விரல்விடில்.
உளன் தீப ஜோதி வடிவில்.
உளன் ஜோதி தரும் ஒளியில்.
உளன் ஒளி பரவும் வெளியில்.
உளன் வெளி தாண்டிய விரிவில்!

உளன் கதிரில், காற்றில், நீரில்.
உளன் பறவை, பாம்பு, மலரில்.
உளன் உன்னில், என்னில், யாவில்.
உளன் ஐம்பொறி தாண்டிய உணர்வில்!

உளன் எனில் உளன்.
உளம் தனில் அருளை உணர்ந்தோர்க் கென்றும்...
உளன் அவருள் உளன்!


அறியா, தெரியா, புரியா தவர்க்கும்,
அருள்மழை அயரா தனைவர்க்கும் பொழியும்...

என் குருநாதன், சத்குரு நாதன்,
இலன் எனினும் உளன்! 

@PrakashSwamy