அஹம் பிரம்மாஸ்மி
~ க-விதை by ஸ்வாமி
.
நானொரு முள்.
மலரல்ல.
மலராகும் விருப்பமோ தேவையோ எனக்கில்லை.
.
மலர் என் சகோதரி.
ஒரே இடத்தில்தான் வசிக்கிறோம்.
இலைக் குடும்பத்துடன்.
செடி எம் தந்தை.
நிலம் எம் தாய்.
.
அவளை விரும்புவோரே என்னை வெறுப்போரும்.
அவள் அழகானவள்...
நான் கூரானவன்...
வரம் கேளாமலே.
.
அவள் யாரையும் மகிழ்விக்க மலரவில்லை.
நான் யாரையும் காயப்படுத்தக் கூராகவில்லை.
அது எம் கடனுமல்ல.
.
மலர்ந்து, விரிந்து, மணம் பரப்புவது அவள் குணம்.
எப்போதும் 'சும்மா இரு'ப்பதே என் தன்மை.
அவளை முத்தமிடும் வண்டுகள் என்மீதும் அமர்வதுண்டு.
தேனுண்ணும் முன்போ... பின்போ...
.
அவளைக் கவரும் மனிதர்கள் பற்றிய கவலை எனக்கில்லை.
பறிக்கப்படுவதே அவளது பிறவிப்பயன்.
பறியாது போனால் பிரிந்து உதிர்வாள்.
மாலையில் சேர்வது அழகுக்கு அழகு.
.
எத்தனையோ சகோதரிகள் வருவர், போவர்.
நான் எப்போதும் இருப்பேன்.
தாயின் மடியில்... தந்தையின் கரத்தில்...
இலைக் குடும்பத்தின் இடையில்...
எல்லையற்ற கால வெளியில்.
ஒரே மாதிரி.
மாற்றமின்றி.
சலனமின்றி.
.
என்னைச் சகியாமல், தவிர்ப்போர் எண்ணற்றோர்.
இலைகளையும் மதியாதோர்.
மலர்களை மட்டும் விரும்புவோர்.
ஆறறிவுள்ளோர்.
அவர்கள் உதிரம் சிந்துவது என் தவறில்லை.
.
நானிருப்பதும் மலரும் இலையும் வசிக்கும் செடியில்தான்.
எப்போதும் மாறாது...
எதனாலும் அசையாது...
எதன்மீதும் விருப்பமின்றி...
யார்மீதும் வெறுப்புமின்றி...
.
நானொரு முள்தான்.
ஆயினும்...
நானே பிரம்மம்!
~ ஸ்வாமி | @PrakashSwamy
Be Joyful & Spread the Cheer
No comments:
Post a Comment