ஒன்றுமற்ற
ஒன்று!
~ க-விதை by ஸ்வாமி
முதலில்
ஏதுமில்லை.
முதல்
என்பதும்.
வெறும்
வெளி. அந்தகாரம்.
எத்தனை
காலம். யாரறிவார்...
காலமும்
கூட இல்லை, அப்போது.
வெடித்தது.
யார்..? எது..!
அதுவோ
முதல்?
அதற்கும்
முன்பிருந்ததா?
எது இருந்தது!
எங்கே?
ஏதுமற்ற
பெருவெளியில் எதுவுமற்றதன் பெருவெடிப்பு.
எதுவுமற்றது
எழுந்தது.
ஏதோவாக...
எல்லாமாக... எங்கும்...
பிரபஞ்ச
விரிவு.
அண்டங்கள்...
உலகுகள்...
நீள்வட்டமாய்.
லிங்கமாய்.
பின், கோள்கள்... உயிர்கள்...
எல்லாம்
ஒரு கர்ப்பத்திலிருந்து.
ஹிரண்ய
கர்ப்பம்.
காலமற்ற
உறக்கம் கலைய...
காலம்
தொடங்கிற்று.
வெடிப்பின் மையத்திலிருந்து.
கோடானுகோடி
கணங்கள்...
யுகங்கள்...
எத்தனையோ...
ஒற்றைப்
புள்ளியிலிருந்து நூறாயிரங்கோடி உலகம்.
விரிந்துகொண்டே
இருக்கிறது இன்னமும்.
ஏது எல்லை?
விரியட்டும்.
எங்கு
முடியும்!
என்று? எவ்வாறு? எவரால்?
எதுவுமற்றது
எல்லாமாயிற்று.
எங்கும், எதிலும் இருக்கிறது.
எதுவாகவும்
அதுவே.
மலை, மடு, மரம்,
பசு, நாய், பரி...
நீ...
என்னைச்
சுற்றி எல்லாம்...
என்னுள்தான்
எல்லாம்...
பொம்மைகள்.
எல்லாம்தான்...
கோடானு கோடி உயிர்கள்...
ஆட்டுவித்து
ஆடாத ஏதோ ஆட்டம்.
யாவும்
அறிந்த திணவாட்டம்.
என்
ஆட்டம் பார்த்திராத, உடையும் பொம்மைகள்.
ஆனாலும்
என் பொம்மைகள்.
விளையாடப்
பொருள் ஏராளம்.
கோள்...
எரிகல்... விண்மீன்...
நீ...
அது... அவை...
வெளியெங்கும்
விளையாட்டு.
பிரபஞ்ச
விளையாட்டு.
அவளுடைய
விளையாட்டு.
எத்தனையோ
முறை ஆடியாகிவிட்டது.
அலுக்கவில்லை
இன்றுவரை.
களைப்பில்லை
இதுவரை.
நிறுத்துவாள்
எப்போதாவது.
களைத்தால்...
அலுத்தால்...
வேடிக்கை
விளையாட்டு.
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
சும்மா...
இருந்த
இடத்திலிருந்தே.
அவளும், நானும்...
இடம், வலம்.
ஈடா, பிங்களா.
ஒன்றின்
பாதியா..?
ஒன்றான
இரண்டா..?
ஒன்றேதானா..!
யாரைக்
கேட்பது..?
எவருக்குத்
தெரியும்..!
விடையற்ற
வினாக்கள்.
ஜதி
சொல்வது இடி. பூகம்பம் கூட.
கோள்களின்
இடையில் புகும் காற்றின் இசை.
ஆடுவேன்
வெளியில்.
அயராத
ஆட்டம்.
அண்டம்
நடுநடுங்க...
சதி...
பதஞ்சலி... வியாக்ரபாதன்... பாண்டியன்...
பார்த்தவர்
சிலர்தான்.
அடங்காத நடனம், நில்லாமல், இதுவரை.
தனியாய்த்
தாண்டவம்...
தந்தனத்
தனதனத் தந்தன...
ஆனந்தத்
தாண்டவமும் ஆடுவதுண்டு.
அவ்வப்போது.
சில நேரம்
அவளுடனும்.
உன்னுள்ளும்
கூட.
கேட்டிருக்கிறாயா
ஸ்ருதி...
ஓங்காரம்தான்.
முதல்
ஓசை. அடி நாதம்.
மூலாதார
மூர்த்தி.
பார்த்திருக்கிறாயா
நடனம்...
ஜோதிச் சுடரின்
அசைவில்.
ஐம்புலன்...
ஆறறிவு...
எதைப்
பார்த்தாய்?
என்ன
கேட்டாய்!
வந்தேனே ஒன்பது முறை.
முதுகில்
சுமந்தேன் உலகை.
தோண்டி
எடுத்து வேதம் காத்தேன்.
தூண்
பிளந்து குடல்மாலை சூடினேன்...
என்னை
நம்பிய குழந்தைக்காக.
யாசகம்
கேட்டு உலகளந்தேன்.
க்ஷத்ரியரை
எல்லாம் ஒழித்தேன்.
காட்டில்
திரிந்தேன்... அவளை மீட்க.
நாடாண்டேன்
நெடுங்காலமாய்.
மலையைத்
தூக்கினேன்.
ஆடினேன்... ஆயிரம் பேருடன்.
பாடஞ்சொன்னேன்... போர்க்களத்தில்.
போதனை
தந்தேன்... மரத்தடியில்.
அத்தனை
முறையும் தவற விட்டாய்.
இன்னொரு
முறை வருவேன் என்று..
இன்னமும்
காத்திருக்கிறாய்!
அவதாரம்
எடுத்தேன்...
அடுத்தடுத்து.
யுகந்தோறும்.
பாடினர்
பன்னிருவர்.
கேட்டாயா
நீ...
நாலாயிரத்தில்
ஒன்றாவது?
முழுமையாக!
விளையாடல்
செய்தேன்.
நான்மாடக்
கூடலின் நாற்திசையிலும்.
பாடினர் அறுபத்துமூவர்.
திருமுறையென்று
ஓதுவார் தினந்தோறும்.
கரைந்தாயா
நீ?
ஒன்றிலாவது!
உதிரம்
குடித்தேன்.
யாகத்தீயில்
வெந்தேன்.
ஒற்றைக்காலில்
தவமிருந்தேன்.
கோயிலில்
விழுந்து தொழுகிறாய்.
அம்மா
என்று அழுகிறாய்.
ஆயிரம்
பேர்சொல்லித் துதிக்கிறாய்.
அறிவாயா
என்னை!
அசையாதிருந்தேன்.
அறிந்ததெல்லாம்
தந்தேன்.
காத்திருந்து
கற்ற ஏழு பேரிடம்.
பின், அவளிடமும்...
என்னில்
பாதியாக்கி.
பின், அவளிடமும்.
எத்தனை
யோகம்...
எவ்வளவு
பயிற்சி...
முயன்றாயா
எதையாவது?
ஏதோ ஒரு
பிறவியிலாவது!
நின்றுவிடும்
ஒருகணம்.
எல்லாம்...
எங்கும்...
ஆட்டம்
அலுத்துவிட்டால்.
அவள் என்
கண்ணை மூடினால்.
அதுவும்
விளையாட்டுதான்.
படைத்தல்...
பொறுத்தல்... கரைத்தல்...
நிற்காத
பிரபஞ்ச விளையாட்டு.
ஒரு
பேரலை...
ஓர்
எறிகல்...
ஒரு
நுண்ணுயிர் கூடப் போதும்.
மூழ்கும்
உலகு.
அழியும்
அகிலம்.
ஊழித்
தாண்டவம்.
காலத்தை
அழிக்கும் ஆட்டம்.
கல்பத்தின்
முடிவில்.
காரிருள்...
பேரிருள்...
எங்கும்
இருள் மட்டும்.
யாரும்
காணாத என் நிறம்.
கண்டத்தின்
காலம் விழுங்கிய கருநீலம்.
உடலெங்கும்...
உலகெங்கும்...
நீல
இருள்.
நீளும்
இருள்.
மிதப்பேன்
நான் தனியே...
எல்லாம்
என்னுள்ளே வைத்து.
பிரளயத்
திவலையில்.
அனந்த
சயனம்.
ஆலிலைமீது.
அரிதுயில்.
அறிந்தவருக்கு... அரி துயில்.
இத்தனை
முறை வந்தாயே...
யோசித்தாயா
ஒரு முறையாவது?
'நான் யார்' என்று!
நேரமிருக்கிறதா
உன் அவசர ஓட்டத்தில்?
அழுவதில்
தொடங்கி, அழுகிப் போய், அழுகையில் முடிவு.
எத்தனை
முறைதான் வருவாய்...
என்னை
மட்டும் அறிய!
செய்ததையே
செய்யும் பொம்மைகள்.
யுகங்களாய்...
பிறவிகளாய்...
கடனெல்லாம்
கட்டியபின் மெல்ல வா.
என்ன
அவசரம்?
எப்படியும்
வந்துதானே ஆகவேண்டும்...
மறுபடியும்!
பொதி
சுமக்க... கரைக்க...
மறுபடியும்
சேர்க்க...
சதா நான்
காத்திருப்பேன்.
சிவமாய்...
சதாசிவமாய்...
சமாதியில்
காத்திருப்பேன்.
காலமற்ற
வெளியில் என் காத்திருப்பு.
ஒன்றல்ல
நீ.
ஏதோ
ஒன்று... அவ்வளவே.
ஒன்றுவது
உன் கடன்.
என்னுடன்தான்.
அரி. அரன்.
உமை. ஆறுமுகன்.
எத்தனையோ
பெயர்...
ஏதேதோ
உருவம்...
எல்லாம்
உனக்காக.
நீயே
செய்த உருவங்கள்.
உருக்கடந்து
வா...
உண்மை
அறிய.
உயிர்மெய்
அறிய.
நான்
எங்குமிருக்கிறேன்.
எதிலுமிருக்கிறேன்.
ஆனால் எதுவாகவுமல்ல.
என்னை
எங்கே போய்த் தேடுகிறாய்.
கோயில்
கோயிலாய்...
தலம்
தலமாய்...
நான்
எங்கும் இருக்கிறேன்.
எல்லாமாக.
எதனுள்ளும்.
ஆடாது...
அசையாது...
இங்கும்தான்.
உள்ளே...
உன்னுள்ளே.
தேடியது
போதும் வா.
காலம்
கடக்குமுன்.
காலமற்ற
காலம் வரும் முன்.
ஒன்றாகலாம்
வா...
இருமையற்ற
ஒன்றாக.
ஒன்றுமற்ற
ஒன்றாக!
~ஸ்வாமி | @PrakashSwamy
Be Joyful & Spread the Cheer
உயிர்மெய் (தமிழ் பதிவுகள்) | SwamyQuote | Swamystery | QuorAnswers by Swamy | Quoraவிடை by ஸ்வாமி | BeenThere, SeenThat
No comments:
Post a Comment